Sunday, August 7, 2011

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்::Happy Friendship Day


நண்பர்கள் இல்லாதவர் என யாருமில்லை. நண்பர்கள் எல்லோருடைய வாழ்விலும் முக்கிய இடத்தை வகிக்கின்றனர். முதன்முதலில 1935ம் ஆண்டு அமெரிக்காவில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இன்று உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

வேறுபாடுகளை கடந்தது நட்பு: இன்றைய வேகமான உலகில் கூட்டுக்குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஆண்-பெண், ஏழை-பணக்காரர் போன்ற வேறுபாடுகளை கடந்தது நட்பு. இந்த நட்புக்கு மதிப்பளிக்கும் தினமாகவே நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தினமும் சந்திக்கும் நண்பர்களை நினைவுபடுத்த தேவையில்லை எனினும், பள்ளிக்கூட, கல்லூரி கால நண்பர்களை நினைவுபடுத்தி, சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது நண்பர்கள் தினம். சந்திக்க முடியாவிட்டாலும், வாழ்த்து அட்டை, இ-மெயில், ஏன் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதன் மூலம் கூட அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியும். புதிய நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வது வரவேற்கத்தக்கது. அதற்காக பழைய நண்பர்களை மறந்துவிடக்கூடாது. பழைய நண்பர்களை நினைவுபடுத்தும் தினமாகவும் நண்பர்கள் தினம் இருக்கிறது.

உன்னதமான உறவு: நண்பர்களிடையே வரக்கூடாத விஷயம் "முறிவு'. தவிர்க்க முடியாத காரணங்களினால் முறிந்து விட்ட நட்புக்கு வைத்தியம் பார்க்கும் நாளாகவும் இந்த நாளை பயன்படுத்திக்கொள்ளலாம். நண்பர்களிடம் மன்னிப்பு கேட்பதால் எந்த இழிவும் இல்லை என்பதை உணர வேண்டும். உறவுகளை தாண்டி நட்பு அவசியமாக இருக்கிறது. உறவுகள் இல்லாதவர்கள், உறவினர்களிடமிருந்து ஒதுங்கியவர்களை பார்த்துவிடலாம். நண்பர்களே இல்லை என யாரும் கூற முடியாது. எந்த ஒரு மனிதனும் தனி தீவாக ஒதுங்கிவிடாமல் காப்பாற்றுகிறது நட்பு. நல்ல நண்பர்களை பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதில் ஐயமில்லை. இந்த உன்னதமான உறவுக்கு உயிர் கொடுக்கும் விதமாகத்தான் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

1 comment: